செங்குன்றம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்குன்றம்,
மீஞ்சூர் அருகே உள்ள பெரியமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 45). இவர், விச்சூர் காந்தி நகரைச் சேர்ந்த செந்தில் (36) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் அருகே மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வேன், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வேலு, செந்தில் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (46). இவர், நூக்கம்பாளையத்தில் உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம் சேகர், மோட்டார் சைக்கிளில் நூக்கம்பாளையம் சென்றார். பெரும்பாக்கம் காமராஜர் சாலை சந்திப்பில் சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான பள்ளிக்கரணை கைவேலி பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story