வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு பணி நிறைவு விரைவில் ரெயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை


வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு பணி நிறைவு விரைவில் ரெயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Feb 2021 3:59 AM GMT (Updated: 8 Feb 2021 3:59 AM GMT)

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை ஓட்டி பார்த்து ஆய்வுபணியை நேற்றுடன் பாதுகாப்பு கமிஷனர் நிறைவு செய்தார். இந்த பாதையில் விரைவில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலான முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலுக்கான பாதை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் சர்.தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய 2 சுரங்க ரெயில் நிலையங்களும், புதுவண்ணாரப்பேட்டை, தாங்கல், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் ஆகிய 6 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பாதைகள் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நிறைவு

இந்தபாதையில் டீசல் என்ஜின் மற்றும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் கடந்த 5-ந்தேதி குழுவினருடன் சென்னைக்கு வந்து ஆய்வு பணியை தொடங்கினார்.

3-வது நாளாக நேற்று மெட்ரோ ரெயிலில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு பாதையிலும், விம்கோ நகரில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மற்றொரு பாதையிலும் சென்று ஆய்வு செய்து ஆய்வுபணியை நேற்றுடன் நிறைவு செய்தார். ஆய்வின் போது நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

80 கிலோ மீட்டர் வேகம்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் பயணிகள் ரெயில் இயக்குவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தார்.

நேற்று 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி பார்த்து அதிர்வுகள் ஏதாவது இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது சுற்றுச்சுவர், கட்டுமானங்கள் உள்ளிட்ட ஒரு சில ஆலோசனைகளை வழங்கியதுடன், திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையத்தின் பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டு உள்ளார். இவை முடிக்கப்பட்டதுடன், இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான சான்றிதழை பாதுகாப்பு கமிஷனர் வழங்குவார். அதன்பிறகு விரைவில் மெட்ரோ ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story