தொடர் மழை காரணமாக கொள்முதல் நிலையத்திற்கு நெல் வரத்து குறைவு
தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் நடப்பாண்டில் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளிடம் இருந்து நெல்வரத்து குறைந்துள்ளது.
கல்லல்,
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். பொதுவாக ஜனவரி மாதம் முதல் விளைந்த நெல்பயிர்களை அறுவடை செய்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு விளைந்த நெற்பயிர்களை கடந்த மாதம் அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு புயல், மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும், அழுகியும் ேபானது. பல நெற்பயிர்கள் மீண்டும் முளைத்து போனது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இளையான்குடி, காளையார்கோவில், கல்லல், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதியில் இந்த பாதிப்பு அதிகளவில் இருந்தது.
குறைந்தளவு நெல் கொள்முதல்
இதன் காரணமாக மீதம் எஞ்சியுள்ள பயிரை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் வயலில் தேங்கி மழைநீரை பம்பு செட் மூலம் அகற்றி ஓரளவு நெல்பயிரை காப்பாற்றி அதை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் நிலையம் சார்பில் வாங்குவதற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் உள்ள விவசாயிகளை சந்தித்து அங்கு நேரடியாக சென்று நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கல்லல் அருகே வேப்பங்குளம் பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து அரசே ெநல் கொள்முதல் செய்து வருகிறது.
தனியாரிடம் விற்க வேண்டாம்
ஆனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மிகவும் குறைவான நெல் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டதாக கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தாண்டு போதிய அளவு விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெற முடியவில்லை. அதற்கு காரணம் பருவம் தப்பி பெய்த மழை தான். நடப்பாண்டில் நல்ல மழை பெய்து கண்மாய்கள் நிரம்பினாலும் கூட அவற்றினால் பாதிப்பு அதிகளவில் இருந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க முடியவில்லை. தற்போது ஒரு கிலோ நெல் ரூ.19.50-க்கு வாங்கி உள்ளோம். மேலும் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை கொடுத்து ஏமாற வேண்டாம். அவர்கள் இடைத்தரகர் உதவியோடு மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி அவற்றை வெளிமார்க்கெட் பகுதியில் அதிகளவில் விற்பனை செய்வார்கள். எனவே விவசாயிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story