இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.
சமயபுரம்,
இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் பூ தட்டுகளை ஏந்தி வந்தனர்.
பூச்சொரிதல் விழா
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று காலை தொடங்கியது. காலை 9.10 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவில் முன்புறத்தில் இருந்து பூ தட்டுகளை ஏந்தி மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டு முழங்க ஆதிமாரியம்மன் கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் வந்தனர்.
பூ தட்டுகளை ஏந்தி வந்த பக்தர்கள்
அதைத்தொடர்ந்து 9.43 மணிக்கு கோவில் குருக்கள் ஒவ்வொரு தட்டுகளாக வாங்கி ஆதி மாரியம்மனுக்கு பூக்களை சாற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் பூக்களை தட்டுகளில் ஏந்தி கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
நேற்று காலையில் இருந்து இரவு வரை திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
Related Tags :
Next Story