தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக சரண்யா ஹரி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக சரண்யா ஹரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக சரண்யா ஹரி பொறுப்பேற்றுக் கொண்டார். மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆணையாளர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த வி.பி.ஜெயசீலன், சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த சரண்யா ஹரி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் ஜெயசீலன் பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் மாநகராட்சி பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று உள்ளார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி கலெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்று உள்ளார். இவரது கணவர் விஷ்வேஷ் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
தண்ணீர் தேங்குவதை தடுக்க
பின்னர் ஆணையாளர் சரண்யா ஹரி நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்று இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார்கள். அனைத்து பிரச்சினைகளும் முழு முயற்சி எடுத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story