10 மாதங்களுக்கு பிறகு திறப்பு: கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது


10 மாதங்களுக்கு பிறகு திறப்பு: கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Feb 2021 5:12 PM GMT (Updated: 8 Feb 2021 5:12 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. மேலும் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளும் திறக்கப்பட்டன.

கடலூர், 

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. கொரோனா  தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாகவே பாடங்களை கற்று வந்தனர்.

480 பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் அரசு அறிவித்தபடி கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இன்று  முதல் தொடங்கியது. அதேபோல், பள்ளியை பொறுத்தவரை  9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.  கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதேபோல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக மாவட்டத்தில் உள்ள 480 அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 480 பள்ளிகள் திறக்கப்பட்டன. 

பரிசோதனை

முன்னதாக பள்ளி, கல்லூரிகளில் வகுப்பறைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். மாணவ, மணாவிகள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். 

அவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வகுப்பறைகளுக்குள் அனுதிக்கப்பட்டனர். 

 10 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள், பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு சென்று தங்களுடைய நண்பர்களை பார்த்து மகிழ்ந்ததோடு, ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் ஆர்வமுடன் கவனித்தனர்.

Next Story