ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த பெண்கள்
வீட்டுமனைப்பட்டா வழங்காததால், நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன், ஆதார் கார்டுகளை பெண்கள் ஒப்படைக்க வந்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த கூட்டத்தில் வெளிப்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது ரேஷன், ஆதார் கார்டுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்கள் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்காததால் எங்களது ரேஷன், ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம் என்று தெரிவித்து, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் ஒரு மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அண்ணா நகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகம், ஆதிதிராவிடர் நலத் துறை, கலெக்டர் அலுவலகம் என சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே தொடர்ந்து அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்தும், வீட்டுமனைப்பட்டா வழங்காததை கண்டித்தும் எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன், ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story