பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்:  வாலிபருக்கு 10 ஆண்டு சிறை  கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 11:10 PM IST (Updated: 8 Feb 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் புலவேந்தன். இவரது மகன் பிரகாஷ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

 இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினர் கடந்த 2018-ம் ஆண்டு ஆயங்குடி பகுதிக்கு சென்று வசித்தனர். அப்போது மாணவி ஆயங்குடியில் இருந்து ரெட்டியூரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது, பிரகாஷ் அடிக்கடி மாணவியை பின்தொடர்ந்து சென்றார். 

பலாத்காரம்

இந்த நிலையில் கடந்த 9.12.2018 அன்று மாலை பாத்திரம் கழுவுவதற்கு தேவையான தண்ணீர் எடுத்து வரும்படி மாணவியின் தாய், அவரிடம் கூறியுள்ளார்.உடனே மாணவி, தண்ணீர் எடுப்பதற்காக பாத்திரத்துடன் அருகில் உள்ள குச்சிரான் வாய்க்காலுக்கு சென்றார். 

அப்போது பின்தொடர்ந்து வந்த பிரகாஷ், மாணவியின் வாயை பொத்தி வாய்க்கால் கரையோரம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அவர் அலறி துடித்தார். உடனே பிரகாஷ், அங்கிருந்து ஓடி விட்டார்.

 இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

10 ஆண்டு சிறை

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் மேரி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாசை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். 

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5, 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

மேலும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.



Next Story