ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்


ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Feb 2021 2:34 AM IST (Updated: 9 Feb 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

தென்காசி:

ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

மக்கள் குறை தீர்க்கும் நாள்

தென்காசி மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம், ெரயில் நகரில் உள்ள தற்காலிக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனி நபர் கடன், விதவை உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 310 மனுக்கள் கொடுத்தனர்.

சாம்பவர் வடகரை யாதவர் சமுதாயம் நாட்டாண்மை வெங்கடேஷ் கொடுத்துள்ள மனுவில், “எங்கள் ஊரில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக 32 சென்ட் இடத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறோம். இதில் உள்ள சுவர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பொது சுவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மற்றொரு சமுதாயத்தினர் இதனை தங்களுக்கு பாத்தியப்பட்டது என்று கூறி நாங்கள் பால்பண்ணை நடத்த முடியாமல் செய்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் அயூப்கான் கொடுத்துள்ள மனுவில், “தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவிலில் ரத வீதி சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வேல்மயில் கொடுத்துள்ள மனுவில், “சிந்தாமணியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டிருந்தது அங்கு இடம் இல்லாததால் அங்கு தொடங்கப்படவில்லை. எனவே அதனை ஆயிரப்பேரியில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தென்காசி முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்துள்ள மனுவில், “காசி விசுவநாத சுவாமி கோவிலில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டு உள்ள அம்மன் சன்னதி வாசல் கதவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிலின் சுற்றுப்புறத்தில் பலர் அசுத்தம் செய்கின்றனர். எனவே அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சிவகிரி தாலுகா ராயகிரியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கொடுத்துள்ள மனுவில், “எங்களது பகுதிக்கு அரசு கேபிள் வந்துவிட்டது. ஆனால் அரசு செட்டாப் பாக்ஸ் கொடுக்கப்படவில்லை. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவை தவிர பலரும் மனுக்கள் கொடுத்தனர்.

நலத்திட்ட உதவி

பின்னர் கூட்டத்தில் வருவாய்த்துறை மூலம் ஆதரவற்ற விதவை சான்றுகள் 4 நபர்களுக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் சிவகிரி வட்டம், புளியங்குடியை சேர்ந்த காந்திராஜன் என்பவர் 06.08.2020 அன்று உயிரிழந்தததையொட்டி, அவரது பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிவாரண உதவிதொகை ரூ.3 லட்சத்துக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் டாக்டர் சமீரன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மகளிர் திட்ட இயக்குநர் விஜயலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தென்காசி உதவி கலெக்டர் (பொ) ஷீலா, ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story