சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்


சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2021 11:01 PM GMT (Updated: 8 Feb 2021 11:01 PM GMT)

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினா்.

கருப்புக்கொடி 
சேலம் அரிசிபாளையம் லீபஜார் பகுதியில் உள்ள பாவேந்தர் தெருவில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அந்த பகுதியில் காலியாக உள்ள சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் தங்களுக்கு வீடு கட்டித்தரும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

ஆனால், இந்த நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாவேந்தர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி, குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீசாா் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது என்றும், இதனால் அமைதியான முறையில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு வீடுகளில் கட்டியுள்ள கருப்புக்கொடிகளை அகற்றுமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை பொதுமக்கள் ஏற்கவில்லை. 

வருகிற 15-ந் தேதி வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப வழங்கவும், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story