மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் கலெக்டரிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு


மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் கலெக்டரிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 9 Feb 2021 4:43 AM IST (Updated: 9 Feb 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவனிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்
கலெக்டரிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு
மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவனிடம் நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாடக கலைஞர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. 
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட மேடை நாடக கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், மேடை நாடக நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், நாடக அரங்கம் அமைப்போர் என பல ஆயிரம் கலைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள்.
கோவில் விழா, அரசு நிகழ்ச்சி, அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் மேடை நாடகம், வீதி நாடகம் ஆகியவற்றில் நாங்கள் பங்கேற்று வந்தோம். தற்போது மேடை நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. 
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் அதிகாரிகளும் போலீசாரும் அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் கடந்த 11 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகிறோம். எங்களுக்கு அனுமதி அளித்தால், அரசின் விதிமுறைகளை  கடைபிடித்து நாடகத்தை நடத்தி கொள்வோம். எனவே மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
விளையாட்டு மைதானம்
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட மாணவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளனர். பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்த பிறகு மாலை 5 மணிக்கு மேல் மாணவர்கள் அங்கு பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் தற்போது அந்த மைதானம் பூட்டப்பட்டு உள்ளது. மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. எனவே மைதானத்தை திறந்து மீண்டும் மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
சாக்கடை கால்வாய்
ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் பாரதி கொடுத்த மனுவில், “ஈரோடு பெருந்துறைரோடு பழையபாளையம் பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
மேலும், வாகனங்கள் குறுக்கு, நெடுக்காக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தார்.
ஈரோடு வி.வி.சி.ஆர்.நகர் அயனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்களது பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு கழிவுநீர் வெளியேறுவதற்காக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு இருந்தது. இந்த சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர். இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
இதேபோல் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 84 மனுக்களை கொடுத்தனர்.
திருமண நிதி உதவி
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் தலா 8 கிராம் தங்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி வாணிலட்சுமி ஜெகதாம்மாள், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story