பட்டப்பகலில் ஜன்னல் கதவை உடைத்து துணிகரம்: பல் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-ரூ.5 லட்சம் கொள்ளை


பட்டப்பகலில் ஜன்னல் கதவை உடைத்து துணிகரம்: பல் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-ரூ.5 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 8 Feb 2021 11:19 PM GMT (Updated: 8 Feb 2021 11:19 PM GMT)

பட்டப்பகலில் பல் டாக்டர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ஸ்ரீரங்கம் அவென்யூ 2-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). பல் டாக்டரான இவர், தண்டையார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை டாக்டர் ஜெயபிரகாஷ், வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மஞ்சுளா (34) உடன் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று விட்டார். இரவில் வீடு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையிட்டனர்.

அதில் கொள்ளையர்கள், பகல் நேரம் என்பதால் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெருவில் செல்பவர்கள் பார்க்காமல் இருக்க காரை மூடும் கவரை ஜன்னல் ஓரம் போட்டு மறைத்து விட்டு, அதன்பின்னர் நிதானமாக ஜன்னல் கதவு மற்றும் கிரிலை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் ‘ஹாட்டிஸ்க்கை’யும் எடுத்துச்சென்று உள்ளனர். மேலும் போலீசாரின் மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து அந்த அறை முழுவதும் தூவி விட்டு, சர்வ சாதாரணமாக கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்து சென்றனர். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story