சேலத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்


சேலத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 9 Feb 2021 7:58 AM IST (Updated: 9 Feb 2021 8:00 AM IST)
t-max-icont-min-icon

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா பிரமுகரை கண்டித்து சேலத்தில் முஸ்லிம்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முற்றுகை மற்றும் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா பிரமுகரை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.

பின்னர் பா.ஜனதா பிரமுகரை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை முஸ்லிம்களில் பலர் கைகளில் ஏந்தி நின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜனதா பிரமுகரின் உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். அப்போது அங்கு பதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் திடீரென பெரியார் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு கம்பிகளை வரிசையாக வைத்து தடுத்து நிறுத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமலும், வெளியே வரமுடியாமலும் தவித்தனர். இதையடுத்து முஸ்லிம்கள் அங்கிருந்து கலைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கூடுதல் போலீஸ் கமிஷனர் கும்மராஜா, போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story