மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை கொடுத்து ரூ.9 லட்சம் மோசடி
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை கொடுத்து ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்,
வெம்பக்கோட்டை அருகே உள்ள நல்லகம்மாள் புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரிடம் விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இவருடன் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த திலீபன்மற்றும் முருகன் ஆகிய இருவரும் மகாலிங்கம் நிறைய பேருக்கு வேலை வாங்கி தந்துள்ளார் என்றும் அவரை நம்பி அவர் கேட்கும் பணத்தை கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய முத்துக்குமார் மகாலிங்கத்திடம் 2 தவணைகளாக அவர் கேட்ட ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமாருக்கு பஞ்சாப்பில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாக நியமன ஆணையினை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.
அந்த அலுவலகத்திற்கு சென்று முத்துக்குமார் விசாரித்தபோது அம்மாதிரியான ஆணை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முத்துக்குமார் வச்சகாரப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது போலீசார் அந்த ஆணை போலி நியமன ஆணை என்று முத்துக்குமாரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து முத்துக்குமார், மகாலிங்கத்திடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். மகாலிங்கம் பணத்தை விரைவில் தந்து விடுவதாக ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
ஆனாலும் 2 ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுபற்றி முத்துக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீசார் மகாலிங்கம், திலீபன், முருகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story