கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டம்- அரசு ஊழியர்கள் 138 பேர் கைது
கோவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 138 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவையில் அரசு ஊழியர்கள் நேற்று 7-வது நாளான கலெக்டர் அலுவலகம் முன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள், கோவை தாமஸ் கிளப்பில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அரசு ஊழியர்கள் 3 பேர் அரைநிர்வாணமாக கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது உடலில் நாமம் போட்டு இருந்தனர்.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது:-
அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேசவில்லை. எங்களது கோரிக்கைளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 138 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story