விருதுநகர் மாவட்டத்தில் 85 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்


விருதுநகர் மாவட்டத்தில் 85 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:12 AM IST (Updated: 9 Feb 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கிய நிலையில் 85 சதவீத மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர்.

விருதுநகர்,

தமிழக அரசு நேற்று முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர அனுமதி அளித்தது. விதிமுைறகளை பின்பற்றி  மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக பள்ளிகளில் கண்காணிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தி உள்ளது. 
இதேபோன்று மாணவர் விடுதிகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. 

மாவட்டத்தில் 189 அரசு பள்ளிகளும், 89 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 75 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 35 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் ஆக மொத்தம் 388 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகள் அனைத்தும் நேற்று முதல் செயல்பட்டன. முதல் நாளில் மொத்தமுள்ள 388 பள்ளிகளில் 9-ம் வகுப்பில் 27 ஆயிரத்து 968 மாணவ-மாணவிகள் படித்து வரும் நிலையில் 23,194 பேர் மட்டுமே வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.

அதேபோன்று மொத்தம் உள்ள 23 ஆயிரத்து 628 பிளஸ்-1 மாணவ,மாணவிகள் 19 ஆயிரத்து 715 பேர் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். பெற்றோரின் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. இதே போன்று ஏற்கனவே கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் 10-ம் வகுப்புகளில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 28 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகளில் 27 ஆயிரத்து 473 பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். பிளஸ்-2 மாணவர்கள் 23,153 பேரில் 21,591 பேர் வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.

இந்தநிலையில் விருதுநகர் நோபிள் மெட்ரிக்பள்ளி நிர்வாகி ஜெரால்டு ஞானரத்தினத்திடம் வகுப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகளின் மன நிலை குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:- 

ஏற்கனவே பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று பிளஸ்-1 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் அரசு அறிவித்த படி நோய்தடுப்பு விதி முறைகளை பின்பற்றுவதற்கு மாணவ-மாணவியர் முழுமையான ஒத்துழைப்பு அளித்தனர். அரசின் இந்த நடவடிக்கையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாடங்களை சரிவர புரிந்து தேர்வினை சிறப்பாக எழுத வாய்ப்பு ஏற்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story