போடி அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதி தோட்ட தொழிலாளர்கள் 2 பேர் பலி
போடி அருகே சாலையோர பாறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தோட்ட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
போடி:
போடி அருகே சாலையோர பாறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தோட்ட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தோட்ட தொழிலாளர்கள்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புசேரி கிராமத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் மணிமுத்து (வயது 35), காளியப்பன் (55), பழனிசாமி (60). இவர்கள் 3 பேரும் கேரள மாநிலம் பியர்ல்ரா பகுதியில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தனர். இவர்கள் தினசரி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று காலை மணிமுத்து உள்பட 3 பேரும் கேரளாவுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர்.
பின்னர் மதியம் வேலை முடிந்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் போடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிமுத்து ஓட்டினார். காளியப்பனும், பழனிசாமியும் பின்னால் அமர்ந்து வந்தனர். மதியம் 2.45 மணி அளவில் தமிழக எல்லையான போடிமெட்டு மலைப்பாதையில் முந்தல் என்ற இடத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய மணிமுத்து, சாலையோரம் இருந்த பாறை மீது மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டார்.
2 பேர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் உயிருக்கு போராடினர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு முதலுதவி சிகிச்சை செய்யும்போது பழனிசாமி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து காளியப்பனும், மணிமுத்துவும் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காளியப்பனும் இறந்துவிட்டார். தற்போது மணிமுத்துவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போடி குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு பாக்கியம் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். காளியப்பனுக்கு பஞ்சு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்ட தொழிலாளர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் போடி டொம்புசேரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story