காலநிலை மாற்றம் காரணமாக கோத்தகிரியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


இருசக்கர வாகனத்தில் உறை பனி கொட்டிக் கிடப்பதை படத்தில் காணலாம்
x
இருசக்கர வாகனத்தில் உறை பனி கொட்டிக் கிடப்பதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 9 Feb 2021 10:35 PM IST (Updated: 9 Feb 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உறைபனி தாக்கம் அதிகரிப்பு

கோத்தகிரி

காலநிலை மாற்றம் காரணமாக கோத்தகிரியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

காலநிலை மாற்றம் 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் உறைபனி தாக்கம் இருக்கும். அப்போது சில நாட்களில் ஜீரோ டிகிரிக்கும் கீழே வெப்பநிலை செல்லும். பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற தாக்கம் இருக்காது.

ஆனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி மாதத்திலும் உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவலாஞ்சி வனப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் கீழே சென்றது.  

உறைபனி தாக்கம் அதிகம் 

இதற்கிடையே கோத்தகிரி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி அதிகமாக இருக்கிறது. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் உறைபனி வெள்ளை கம்பளம் விரித்தால்போல காணப்படுகிறது. அதுபோன்று புல்வெளிகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றில் அதிகாலை நேரத்தில் பனிகட்டிகள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

அத்துடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் காலை வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அதுபோன்று தொழிலாளர் களும் தேயிலை தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

மகசூல் பாதிப்பு 

மாவட்டத்தில் நடப்பாண்டு, வழக்கத்திற்கு மாறாக, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் முழுவதும் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு குறைந்து, தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் சுட்டெரிப்பதால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கம் அதிகரித்து மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று இங்கு பயிரிடப்பட்டு உள்ள மேரக்காய் செடிகளும் கருகி வருகின்றன. 

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 

விவசாயிகள் கவலை 

தற்போது கோத்தகிரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக இருப்பதால், காய்கறி மற்றும் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம்  ஏற்பட்டு வருவதால் கவலையடைந்து உள்ளனர்.

மழை பெய்தால் மட்டுமே இந்த உறைபனியின் தாக்கம் குறையும். எனவே மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு உள்ள உறைபனியின் தாக்கத்தால் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story