திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்


திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்
x
தினத்தந்தி 10 Feb 2021 12:02 AM IST (Updated: 10 Feb 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்

திருப்பூர்:-
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
முதல்-அமைச்சர் பிரசாரம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 
அதன் விவரம் வருமாறு:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை, காலை கோவையில் இருந்து புறப்பட்டு அவினாசிக்கு காலை 9 மணிக்கு வருகிறார். அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து பூண்டி ரிங்ரோடு, பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக பாண்டியன் நகரில் காலை 10 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் 11.30 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் காங்கேயம் ரோடு வழியாக காங்கேயம் பஸ் நிலையம் அருகில் மதியம் 12.55 மணிக்கு முதல்-அமைச்சர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் காங்கேயத்தில் மதிய உணவு சாப்பிடுகிறார். மதியம் 2.35 மணிக்கு காங்கேயத்தில் என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தாராபுரம், மடத்துக்குளம்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வட்டமலை, ஊதியூர், நஞ்சியம்பாளையம் வழியாக சென்று மாலை 4.45 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் தளவாய்பட்டிணம், செல்லாம்பாளையம், காரத்தொழுவு, கணியூர் வழியாக மாலை 6.10 மணிக்கு மடத்துக்குளம் நால்ரோட்டிற்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மடத்துக்குளத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பாசறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். கூட்டம் முடிந்ததும் இரவு 8.35 மணிக்கு உடுமலைக்கு சென்று அங்கு தங்குகிறார்.
உடுமலை, பல்லடம்
மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.50 மணிக்கு உடுமலை பஸ் நிலையம் அருகில் முதல்-அமைச்சர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஏரிப்பாளையம், குறிஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், பெரியபட்டி வழியாக காலை 11.50 மணிக்கு பல்லடம் வந்து பஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மதியம் 12.25 மணிக்கு மகளிர் குழு சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

Next Story