மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்திய 92 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்திய 92 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
அதேபோல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பும் நடத்தினர். இதில் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவதைப் போன்று மாற்றுத்திறனாளிகளின் மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் 5 சதவீத பணிகளை உத்தரவாதப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மறியல் போராட்டம்
இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அருள் தலைமை தாங்கினார்.கணபதி, லிவிட்டா, லட்சுமி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, கண்ணன், சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமார், தங்ககுமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் குடியேறும் போராட்டம் நடத்த அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
உடனே அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 57 பேரையும் கைது செய்தனர். இதில் 31 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் வாகனங்களில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கிள்ளியூர்
இதுபோல், கிள்ளியூர் யூனியன் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். சார்லஸ் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் கிருஷ்ணதாஸ், கட்டுமான சங்க வட்டார நிர்வாகி பால்ராஜ், சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட 35 பேரை கருங்கல் போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story