அ.தி.மு.க. பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்


அ.தி.மு.க. பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்
x
தினத்தந்தி 9 Feb 2021 8:18 PM GMT (Updated: 9 Feb 2021 8:21 PM GMT)

அ.தி.மு.க. பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்.

கோவை,

அ.தி.மு.க.-பா.ஜனதா தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும் என்று எச்.ராஜா கூறினார்.

பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியாயமற்ற போராட்டம்

கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தை போக்க புதிய வரி விதிக்காமல் மத்தியில் பா.ஜனதா தாக்கல் செய்த பட்ஜெட் நன்மையை அளிக் கும். வேளாண் திருத்த சட்டங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனையாக கூறி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

 எந்த நியாயமும் இல்லாமல் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரி பூச வேண்டும் என்ற தீயநோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. 2019-க்கு பிறகு தி.மு.க. பலவீனமாகி கொண்டிருக்கிறது. முன்னுக்கு பின் முரணாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

சசிகலா வருகை

அ.ம.மு.க.வில் தினகரன் இடத்திற்கு வேண்டுமானால் சசிகலா வரலாம். சசிகலா வருகையால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழுக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. தான். தமிழ் என்ற பெயரில் திராவிட கட்சிகள் ஏமாற்றுகின்றன. 

ஆண்டாளை இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவை கைது செய்யாமல், மதரீதியாக அவதூறாக பேசியதாக பா.ஜனதாவின் கல்யாணராமனை கைது செய்தது பாரபட்சமானது.  ஆலயங்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்ற ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்து சரியானது.

 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு வெள்ளிவேல் கொடுத்திருந்தால் வாங்கியிருப்பார். வெண்கல வேல் என்பதால்தான் அவர் வாங்கவில்லை.

தொகுதி பங்கீடு

பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியில் யாரும் ஏ டீமோ, பி டீமோ இல்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க ஒரே டீம்தான். நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும். எங்களது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப பங்கீடு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாவட்ட தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் தாமு, துணைத்தலைவர் மதன் மோகன், சபரிகிரீஷ், பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story