தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்; வாழைகள் நாசம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்; வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:50 PM GMT (Updated: 9 Feb 2021 9:50 PM GMT)

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகள் நாசம் ஆனது.

தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகள் நாசம் ஆனது. 
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. 
இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நாசப்படுத்தி வருவது வாடிக்கையான நிகழ்வுகளாக ஆகிவிட்டன. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நிகழ்ந்து உள்ளது.
வாழைகள் நாசம்
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவருக்கு அந்த கிராமத்தில் 2 ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் வாழை பயிரிட்டு உள்ளார். 
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட குரங்குகள், சண்முகத்தின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த குரங்குகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை கடித்து தின்றன. இதை கண்டதும் சண்முகம் ஓடிச்சென்று அந்த குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டினார். தோட்டத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததில் ½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் நாசம் ஆனது. 
இழப்பீடு
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும் குரங்குகளால் நாசப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

Next Story