திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து தி மு க வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து தி மு க வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்:
தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. குப்பைகள் முழுமையாக அள்ளப்படாமல் குப்பை வரி செலுத்த பொதுமக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். 60 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. மாநகரில் முறையாக மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செந்தூர் முத்து, மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெ.முத்துசரவணன், நிர்வாகி ராஜ்மோகன்குமார், பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி, வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பெரியார் காலனி எம்.எஸ்.மணி, துணை அமைப்பாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜான்வல்தாரீஸ், வடக்கு மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஆர்.முத்துக்குமார உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் திருப்பூரின் நிலைமை மிகவும் மோசம் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனர்.
Related Tags :
Next Story