சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது 7 பார்சல்களில் 54 டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. அதன் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது எடை எந்திரங்களில் உயர் ரக கஞ்சா மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 44 கிலோ எடைக்கொண்ட கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 620 கிராம் ‘பிரிகேப்லின்’ என்ற போதை மாத்திரைகள், 700 கிராம் போதை பவுடர் ஆகியவற்றையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போதை பொருள் கொண்ட பார்சலை கத்தாருக்கு அனுப்பிய ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி மற்றும் ஏஜெண்டு ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போதை பொருள் கொண்ட பார்சல்களை அனுப்பியது யார்? என விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story