கோட்டூர் அருகே செருவாமணி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கோட்டூர் அருகே செருவாமணி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 1:22 AM GMT (Updated: 10 Feb 2021 1:22 AM GMT)

கோட்டூர் அருகே செருவாமணி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள செருவாமணி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

பாதி பணிகள் முடிந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுநாள் வரை கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து செருவாமனி ஊராட்சி மன்ற தலைவர் செருவை கார்த்திக் கூறியதாவது:-

பாதியில் நிற்கிறது

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி தொடங்கியது. தற்போது பணிகள் பாதியில் நிற்கிறது.

கடந்்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு வேலையையும் செய்யாமல் பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். கிராமத்தின் சார்பாக கடும் முயற்சியில் நிலம் ஒதுக்கீடு செய்து நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இடவசதி இல்லை

ஆனால் கட்டுமான பணி பாதியிலேயே நிற்பது வேதனை அளிக்கிறது. மேலும் தற்போது உள்ள கொள்முதல் நிலைய கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது உள்ள கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. பாதுகாப்பும் இல்லை. எனவே அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள கொள்முதல் நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story