திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி ரூ.6 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி ரூ.6 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 6:59 AM IST (Updated: 10 Feb 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி ரூ.6 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி மன்னார்குடியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி, 

2015-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு 400 சதுர அடியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் 100 நாள் வேலையை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தி, வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை குடும்பத் தலைவர் இறந்தால் மட்டும் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் இறந்தாலும் எந்தவித நிபந்தனையும் இன்றி அந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் மன்னார்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய நிர்வாகிகள் ராஜாங்கம், மகேந்திரன், ரமேஷ்குமார், சிவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாணவர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மன்னார்குடி நகர விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் கார்த்திகேயன், நகர தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கலைச்செல்வன், நகர துணைச்செயலாளர் தனிக்கோடி, மாவட்ட குழு உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய தலைவர் ராதா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் தமிழார்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு 400 சதுர அடியில் புதிய கான்கிரீட் வீடுகளை கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோட்டூர்

கோட்டூர் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பழைய கான்கிரீட் தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். புயல் மற்றும் கனமழை, கொரோனா ஆகிய பாதிப்புகளால் வாழ்வாதாரம் இழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 நாள் வேலை திட்டத்தை நகர பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 10 ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story