கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில், 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்


கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில், 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2021 7:29 PM IST (Updated: 10 Feb 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குடியேறும் போராட்டம்
தமிழக அரசு தெலங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தனியார் துறை வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து 3 மாதங்களில் 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டிதாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டம் மாவட்ட துணை தலைவர் சக்கரையப்பன் தலைமையில் நடந்தது. மதியம் அவர்களை போலீசாார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
முற்றுகை போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு செல்லாமல், மீண்டும் தாலுகா  அலுவலகம் முன்பு இரவு முழுவதும் அங்கேயே தூங்கினர். பின்னர் நேற்று காலை 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நேற்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாலை 4.30 மணி அளவில் போராட்டத்தை முடித்துக் கொண்டதாகவும், அரசு அறிவித்தபடி ஒரு வாரத்தில் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் 16-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சக்கரையப்பன் தெரிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story