7 பேர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் உண்மையை மறைத்து பேசுகிறார்-எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘தி.மு.க. ஆட்சியின்போது தண்டனையை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு 7 பேர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் உண்மையை மறைத்து பேசுகிறார்’ என்று திருப்பத்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருப்பத்தூர்
‘தி.மு.க. ஆட்சியின்போது தண்டனையை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு 7 பேர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் உண்மையை மறைத்து பேசுகிறார்’ என்று திருப்பத்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசாரம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 5-வது கட்டமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் முதல் நிகழ்ச்சியாக ஆம்பூர், வாணியம்பாடியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருப்பத்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம்
வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை திருப்பத்தூர் வழியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி ஊத்தங்கரையில் இருந்து வாணியம்பாடி கூட்ரோடு வரை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த ரூ.299 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் சொன்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனால்தான் இங்கே நெஞ்சை நிமிர்த்தி எந்தெந்த திட்டங்கள் நிறைவேறப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் சட்டமன்றத்திற்கு வருவதில்லை. அ.தி.மு.க. அரசு எந்த திட்டத்தை போடுகிறது என்பதையும் பார்ப்பதில்லை. அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பதும் உங்களுக்கு தெரியவில்லை.
துறைவாரியாக நாங்கள் செய்த சாதனைகளை நீங்களும், மக்களும் தெரிந்து கொள்ளவே பத்திரிகையில் வெளியிட்டு வருகிறோம்.
தினந்தோறும் பத்திரிகையில் வெளியிட்டு முதல்வர் என்ன கிழித்தார்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே நாங்கள் உங்களை போன்று கிழிக்க மாட்டோம். திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆகவேதான் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
உண்மையை மறைத்து பேசுகிறார்
தற்போது 7 பேர் விடுதலை பற்றி தினந்தோறும் ஸ்டாலின் பேசிவருகிறார். 2000-வது ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தார். 7 பேருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனையை நிறைவேற்றலாம் என தீர்மானம் நிறைவேற்றி விட்டு இப்போது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை ஸ்டாலின் மறைத்து 10 ஆண்டுகளாக 7 பேர் விடுதலையை நாங்கள் கண்டு கொள்ளவில்லை என பேசுகிறார்.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது அம்மாவின் அரசு. ஆனால் தி.மு.க. 7 பேருக்கும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைபடுத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றியது. இந்த உண்மையை மறைத்து பேசி வருபவர் ஸ்டாலின்தான்.
ஸ்டாலின் பச்ைச பொய்யாக பேசுகிறார். வாயில் உண்மை வராது. இந்திய திருநாட்டில் ஒரு கட்சி தலைவருக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும். இதை மறுக்க முடியுமா?. அன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதில் எது பொய், எது உண்மை என்று மக்கள் நீதிமன்றத்தில் வைக்கலாம். மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும்.
பெட்டியை திறக்கவே முடியாது
2000 அம்மா மினி கிளினிக் திறப்பதை தடுப்பதற்கு சில டாக்டர்களை துண்டிவிட்டு நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின். அ.தி.முக. அரசு கொண்டு வரும் திட்டத்தை தடுத்து நிறுத்துதை வாடிக்கையாக கொண்டவர் ஸ்டாலின்.
ஊர், ஊராக சென்று குறைகளை மனுவாக பெட்டியில் போட வைக்கிறார். இவர் முதல்வராக வந்த பிறகு அதனை பிரித்து பார்ப்பாராம். ஜெயலலிதா எனக்கு பிறகும் 100 வருடத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி, அதிகாரத்தில் தொடரும் என்றார். எனவே 100 வருடத்திற்கு அந்த பெட்டியே ஸ்டாலினால் திறக்க முடியாது.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மக்களை கண்டு கொள்ளவில்லை. இப்போது நாங்கள் அடிக்கிற அடியில் பயந்து தின்னைக்கு வந்து மனுக்களை பெற்று வருகிறார்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும்
ஜோலார்பேட்டையில் ரூ.190 கோடியில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். எடப்பாடி பழனிசாமி ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம் முதல்வராக இருப்பார் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் துணையோடு 4 ஆண்டு நிறைவு செய்கிறோம். அடுத்து வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும்.
குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் தங்கள் குறைகளை 1100 என்ற செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடி தெரிவிக்கலாம். உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.
இந்த திட்டத்தை 10 நாளில் தொடங்கி வைக்க உள்ளேன். இதன்மூலம் மக்கள் மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமமல் குறைகளுக்கு தீர்வு காணுகிற அரசு அ.தி.மு.க.
ஸ்டாலின் வாங்கும் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என கூறினார். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் மனு வாங்கினார். அப்போது அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு இருந்தது. அவர் மனுவை எங்கு கொண்டு கொடுக்க முடியும்?. எப்படி மக்கள் குறைகளை தீர்க்க முடியும்?. ஏமாற்றுகின்ற கட்சி தி.மு.க. தான். ஸ்டாலினால் எந்த குறையையும் தீர்க்க முடியாது. ஆனால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, குறைகளை நிவர்த்தி செய்யும் அரசு அ.தி.மு.க. அரசு.
‘நீட்’ தேர்வுக்கு தி.மு.க.தான் காரணம்
சென்னை முதல் திருப்பத்தூர் வரை எல்லா ஏரியும் நிரம்பி காட்சி அளிக்கிறது. இறைவன் நமக்கு ஒத்துழைக்கிறார். ஸ்டாலின் எரிச்சல்பட்டு என்ன பண்ணுவது?. கடவுளே என் பக்கம் இருக்கிறார்.
நீட் தேர்வை கொண்டு வர தி.மு.க.தான் காரணம். அதை தடுத்து நிறுத்த சட்ட போராட்டம் நடத்தியது அ.தி.மு.க.
கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா சிறப்பு நிதியாக ஒரு குடும்பத்துக்கு ரூ.4500 வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு.
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரத்தை மீட்டெடுக்க கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்து உள்ளோம். இதனை பாராட்ட மனம் இல்லை. அதற்கு மாறாக அ.தி.மு.க. வினர் பயன்பெறவே கடன் ரத்து என ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க.வினர் கடன் வாங்கவில்லையா?. அவர்களுக்கும் சேர்த்துதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்டாலின் மீண்டும் கூறினால். தி.மு.க.வினரே அவருக்கு எதிராக கொடி பிடிப்பார்கள்.
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு விருதுகளை வாங்கும் மாநிலம் தமிழகம். ஆகவே தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story