ஊழல்வாதிகளின் கூடாரம் அ.தி.மு.க. என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஊழல்வாதிகளின் கூடாரம் அ.தி.மு.க. என்று தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
போடி:
ஊழல்வாதிகளின் கூடாரமாக அ.தி.மு.க. விளங்குகிறது என்று தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக தேனி மாவட்டத்திற்கு வந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆண்டிப்பட்டி, தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்தநிலையில் 2-ம் நாளான நேற்று பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, மீனாட்சிபுரம், போடி, தேவாரம், அல்லிநகரம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் என அ.தி.மு.க. அரசில் அனைவரும் ஊழல்வாதிகளாகவே உள்ளனர். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல கோடி ரூபாய் ஊழல்களை செய்துவிட்டனர். ஊழல்வாதிகளின் கூடாரமாக அ.தி.மு.க. உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களை அறிவிக்கிறார். திட்டங்களின் வேலைகளுக்கு டெண்டர் விடுகிறார். ஆனால் அதற்கான வேலைகள் நடைபெறவில்லை. டெண்டர்கள் மூலம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுகிறார்.
லஞ்சம், ஊழல்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டீ வியாபாரியாக இருந்தவர். தற்போது அவருக்கு சென்னை மாநகரில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐ.டி. உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் உள்ளன. இதற்கு பணம் எப்படி வந்தது? லஞ்சம், ஊழல் மூலம் தான் வந்தது. அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு சென்று, தமிழகத்தில் பெறப்பட்ட லஞ்ச பணத்தை அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து பதுக்கியுள்ளார்.
அமைச்சர்கள் கட்டுப்பாடு இன்றி அவரவர் துறைகள் வழியாக கோடிக்கணக்கில் சம்பாதித்து கோட்டை கட்டுகின்றனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு பயந்து தமிழ்நாட்டை மத்திய அரசின் கையில் ஒப்படைத்துவிட்டனர். இதனால் தமிழகத்தின் உரிமைகள் பல வழிகளில் பறிக்கப்படுகிறது. இதுபோன்று தமிழ்நாட்டில் நடைபெறும் காட்சிகளை கண்டு மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story