திறந்த 2 மணி நேரத்தில் டாஸ்மாக் கடை மூடல்
திண்டிவனம் அருகே திறப்பு விழா கண்ட 2 மணி நேரத்தில் கிராம மக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே என்.புதூர் கிராம எல்லையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்றது. இதற்கு அருகில் உள்ள கிராண்டிபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தனர்.
கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராண்டிபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு அங்கு வந்தனர்.
முற்றுகை
அங்கு டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் டாஸ்மாக் கண்காணிப்பாளர் ராமதாஸ், வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, டாஸ்மாக் கடையை மூடுவதாக கண்காணிப்பாளர் ராமதாஸ் தெரிவித்தார். இதையடுத்து மதியம் 1 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டு, அதில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் மினி லாரியில் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி்யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story