மின்சாரம் துண்டிப்பால் தி.மு.க.வினர் சாலை மறியல்


மின்சாரம் துண்டிப்பால் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Feb 2021 10:30 PM IST (Updated: 10 Feb 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

மயிலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

மயிலம், 

மயிலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்தும், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் மயிலம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மயிலம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சேதுநாதன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், மாவட்ட துணை செயலாளர் மலர்மன்னன், மாவட்ட பொருளாளர் ரவி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

சாலை மறியல் 

ஆர்ப்பாட்டத்தில், டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ. கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 எம்.எல்.ஏ. க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் புதுவை-திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மீண்டும், மின்வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு தி.மு.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story