பனியன் நிறுவன உரிமையாளர் கழுத்தை அறுத்து கொலை
பனியன் நிறுவன உரிமையாளர் கழுத்தை அறுத்து கொலை
திருப்பூர்:-
திருப்பூரில் பணப்பிரச்சினையால் பனியன் நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணப்பிரச்சினை
தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு காமாட்சிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் அரவிந்த் (27). மூர்த்தியும், அரவிந்தும் சேர்ந்து கடந்த மாதம் திருப்பூர் ரங்கநாதபுரத்தில் பனியன் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு அரவிந்த் ரூ.1 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மூர்த்தி தனது பங்குத் தொகையை பின்னால் தருவதாக அரவிந்த்திடம் தெரிவித்துள்ளார். ஒரு மாதம் முடிந்ததும் நிறுவனத்தின் வரவு-செலவுகளை மூர்த்தி, அரவிந்த்திடம் சரியாக தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மூர்த்தி குடிபோதையில் ரங்கநாதபுரத்தில் உள்ள பாலித்தீன் நிறுவனத்திற்கு வந்துள்ளார். அங்கு அரவிந்த் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பணப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மூர்த்தி கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த அரவிந்த் கத்தியால் மூர்த்தியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி இறந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், பணப்பிரச்சினையால் அரவிந்த் கத்தியால் மூர்த்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அரவிந்த்தை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story