நாமக்கல்லில் ஓடும் காரில் திடீர் தீ 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நாமக்கல்லில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கியாஸ் கார்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காகித ஆலை குடியிருப்பில் வசித்து வருபவர் பாரதி (வயது 32). இவர் கோவையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கமி (26). இவர்களுக்கு நிஷா (2) என்ற குழந்தை உள்ளது.
இவர்களும், உறவினர் விவேக் (32) என்பவரும் நேற்று ஒரு காரில் நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். மதியம் 1 மணி அளவில் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கியாஸ் நிரப்பும் மையத்திற்கு சென்று கியாஸ் நிரப்பினர். பின்னர் அங்கிருந்து காரை பாரதி ஓட்டி வந்தார்.
தீ பிடித்து எரிந்தது
சிறிது தூரம் சென்றபோது திடீரென காரில் இருந்து புகை வர தொடங்கியது. இதனால் உடனடியாக பாரதி காரை நிறுத்தினார். அப்போது காரில் தீ பிடித்தது. இதையடுத்து காரில் பயணம் செய்த 4 பேரும் அதில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே காரில் தீ மளமளவென பரவ தொடங்கியது.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கியாஸ் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story