நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு


நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2021 8:45 PM GMT (Updated: 10 Feb 2021 8:45 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கி உள்ளது. பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு ஏற்கனவே டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாவட்டத்தில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் பெண்கள் உள்பட மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டீன் விளக்கம்

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்கள் இங்கு வந்து பரிசோதனை மேற்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோருக்கு காய்ச்சல் இல்லை. தற்போது 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மாநகர் பகுதியில் யாருக்கும் பாதிப்பு இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது' என்றார். 

சுகாதார பணிகள் தீவிரம்

இதையடுத்து நெல்லை மாநகர பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில், ஒவ்வொரு மண்டல பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story