‘போலீசாரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களை கருணை கொலை செய்யுங்கள்’ குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு
‘போலீசாரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களை கருணை கொலை செய்யுங்கள்’ என்று குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு கொடுத்தனர்.
ஈரோடு
‘போலீசாரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களை கருணை கொலை செய்யுங்கள்’ என்று குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு கொடுத்தனர்.
பொய் வழக்கு
கோபி அருகே உள்ள காடையம்பாளையம் பத்மா நகரை சேர்ந்த சீனிவாசன் அவருடைய மனைவி கவுரி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய கணவர் மீது போலீசார் 2 பொய்யான வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் எங்களுடைய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். இது தொடர்பாக நாங்கள் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பழைய குற்றவாளி
இதைத்தொடர்ந்து என்னுடைய கணவர் மீது போடப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் அவர் விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அதன் பின்னர் பழைய குற்றவாளி என்று எனது கணவரை போலீசார் இரவு நேரங்களில் வீட்டுக்கு வந்து அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் 3 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, மளிகை கடை வைத்து நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த போலீசார்கள் எனது கணவரை அடித்து இழுத்துச்சென்று விட்டனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கருணை கொலை
இதனால் கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் எங்களை காலி செய்ய சொன்னார்கள். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் 2 பெண் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறோம். தொடர்ந்து போலீசார் இவ்வாறு செய்து வருவதால் எங்கள் குடும்பம் பெரும் மன உளைச்சலில் உள்ளது.
எனது கணவர் பெயரை போலீஸ் துறையினரால் பராமரிக்கப்படும் குற்ற பதிவேட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களை அரசே கருணை கொலை செய்ய வேண்டுகிறோம். அப்படி இல்லையென்றால் நாங்கள் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story