தோழியுடன் பேசிக்கொண்டு இருந்த வாலிபருக்கு கத்திக்குத்து - இந்து முன்னணியை சேர்ந்த 2 பேருக்கு வலைவீச்சு


தோழியுடன் பேசிக்கொண்டு இருந்த வாலிபருக்கு கத்திக்குத்து - இந்து முன்னணியை சேர்ந்த 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2021 4:25 AM IST (Updated: 11 Feb 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை கத்தியால் குத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை,

கோவை கோட்டைமேடு அருகே எஸ்.எஸ். கோவில்வீதியை சேர்ந்தவர் முகமது முபாரக். இவருடைய மகன் அகில் அகமது (வயது 27). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், ராமநாதபுரம் தன்வந்திரி கோவில் அருகே தனது தோழி ஒருவருடன் நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கார்த்திக், அவருடைய நண்பர் சஞ்சய் என்ற சச்சின் ஆகியோர் அகில்அகமது விடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டனர். 

மேலும் அவரிடம், இளம்பெண்ணுடன் எதற்காக இங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று அவர்கள் கேட்டனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அகில் அகமதுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. சஞ்சய் இரும்புக் கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் காயமடைந்த அகில் அகமது, ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவர்கள் 2 பேரும் அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அகில் அகமதுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அகில் அகமதுவிடமும் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் கார்த்திக், சஞ்சய் ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story