ஊரப்பாக்கம் காரணைபுதுச்சேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஊரப்பாக்கம் காரணைபுதுச்சேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள காரணைபுதுச்சேரி ஏரியில் கழிவுநீரை விடுவதாலும், குப்பை கொட்டுவதாலும் மாசு ஏற்படுவதாக அளித்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. பின்னர், இதுதொடர்பாக ஆய்வு செய்ய செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஆய்வு அறிக்கையை நிபுணர் குழு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘63 ஏக்கர் பரப்பளவு கொண்ட காரணைபுதுச்சேரி ஏரியின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை ஏரியில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏரியின் கிழக்கு பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஏரியின் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்பை அகற்ற காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம் 3 மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘நிபுணர் குழுவின் பரிந்துரையை காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கையை மார்ச் 9-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story