ஈழத்தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலின் செய்த பணிகளை குறைகூறுவதா? முதல்-அமைச்சருக்கு க.பொன்முடி கண்டனம்


ஈழத்தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலின் செய்த பணிகளை குறைகூறுவதா? முதல்-அமைச்சருக்கு க.பொன்முடி கண்டனம்
x
தினத்தந்தி 11 Feb 2021 4:21 AM GMT (Updated: 11 Feb 2021 4:21 AM GMT)

“ஈழத்தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலின் செய்த பணிகளை குறைகூறுவதா?”, என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, க.பொன்முடி கண்டனம் தெரிவித்தார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்று தடை வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெங்களூரு வருகையால் மன குழப்பத்திலும், சஞ்சலத்திலும், தடுமாற்றத்திலும், என்ன நடக்கப் போகிறதோ? என்ற அச்சத்திலும் இருப்பது எல்லோருக்கும் புரிகிறது.

அதனால் கூட்டம் தோறும் பிரசாரம் என்ற பெயரில், பச்சைப் பொய்களை- கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அவரது இயலாமையை மறைக்க, மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கிறார். ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடை உத்தரவை விலக்கிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் வாருங்கள். நேருக்கு நேர் பேசுவோம் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி விட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்றுள்ள ஒரே சிந்தனை- பொழுது விடிந்தால் தி.மு.க. மீது என்ன பொய் சொல்வது? அ.தி.மு.க. சாதித்தது என்று எந்த பொய்யைச் சொல்வது? என்பது தான்.

10 வருடம் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்சி செய்த அ.தி.மு.க., இப்போது 4 வருடங்களாக வெறும் டெண்டர் கொள்ளை, ஊழல், கமிஷன், கரப்ஷன், கலெக்சனுக்காக ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு தி.மு.க. செய்த சாதனைகளையோ, செயல்படுத்திய முத்திரை பதிக்கும் திட்டங்களையோ- ஏன் ஈழத் தமிழருக்கும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக மு.க.ஸ்டாலின் செய்த பணிகளையோ குறைகூற கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story