நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை விமான நிலையத்தில் இடைத்தரகர் கைது - சிங்கப்பூரில் இருந்து வந்தபோது சிக்கினார்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட தரூண் மோகன் சிங்கப்பூரில் இருந்து வந்தபோது சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
ஆலந்தூர்,
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஆள்மாற்றாட்டம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகரான தரூண் மோகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளில் இருந்து வந்தாலோ, இங்கிருந்து தப்பி சென்றாலோ கைது செய்ய வேண்டும் என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த இடைத்தரகர் தரூண் மோகனை கைது செய்தனர். இது பற்றி தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை வந்து கைதான இடைத்தரகர் தரூண் மோகனை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story