அரசு பஸ் மீது சொகுசு வேன் மோதி 3 பேர் படுகாயம்
வந்தவாசியில் அரசு பஸ் மீது சொகுசு வேன் மோதி கோவிலுக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வந்தவாசி
வந்தவாசியில் அரசு பஸ் மீது சொகுசு வேன் மோதி கோவிலுக்கு சென்ற பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதுபோல தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தை சேர்ந்த சொன்னம்பட்டி கிராமத்தில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு அமாவாசை பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சொகுசு வேனில் வந்தனர்.
வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயன் (வயது 23) ஓட்டி வந்தார்.
அப்போது முன்னால் சென்ற அரசு பஸ் ஆராசூர் கூட்டுச் சாலையில் உள்ள வேகத்தடைக்காக வேகத்தை குறைத்தபோது பின்னால் வந்த சொகுசு வேன் அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில், பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், வேனின் முன்புறமும் நொறுங்கியது.
வேனில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சொன்னம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் மனைவி பூங்கொடி(37), அதே ஊரைச் சேர்ந்த நல்லப்பன் மனைவி மாரியம்மாள்(40), வேன் டிரைவர் விஜயன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story