சேதுக்கரை கடலில் பக்தர்கள் வழிபாடு


சேதுக்கரை கடலில் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 11 Feb 2021 7:59 PM IST (Updated: 11 Feb 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையான நேற்று ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ராமநாதபுரம், 
தை அமாவாசையான நேற்று ராமநாதபுரம் அருகே சேதுக்கரை கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தை அமாவாசை
தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் கடற்கரை, நீர்நிலைகள், தீர்த்தங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேதுக்கரை, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக சிறப்பு பெற்று விளங்குகிறது. 
இதனை ரத்னாகர தீர்த்தம் என்று அழைப்பதோடு ராமாயண காவியத்தோடு தொடர்புடையது ஆகும். இதனால் இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று தை அமாவாசையையொட்டி  தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேதுக்கரை கடற்கரையில் அதிகாலை முதல் குவிந்தனர். 
தர்ப்பண பூஜை
அங்கு கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கடந்த பல மாதங்களாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பக்தர்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் கொரானா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு நேற்று பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். 
கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் யாகம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நடத்தினர். இதில் ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சேதுக்கரையில் குவிந்ததால் அந்தபகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story