தை அமாவாசையையொட்டி தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்


தை அமாவாசையையொட்டி தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 11 Feb 2021 8:24 PM IST (Updated: 11 Feb 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

தைஅமாவாசையையொட்டி நேற்று தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தூத்துக்குடி:
தைஅமாவாசையையொட்டி நேற்று தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசை
தை மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு செய்ய சிறந்த நாளாக விளங்கி வருகிறது. இதனால் நீர்நிலைகளில் மக்கள் சிறப்பு பூஜைகளை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். 
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களிலும் நேற்று காலையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தூத்துக்குடியில் இந்த சிறப்பு வாய்ந்த தை அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்து தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமானோர் கடலில் புனித நீராடினர். பின்னர், கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனால் நேற்று அதிகாலையில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் குவிந்து, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கயத்தாறு
கயத்தாறில் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் உள்ள ராமர் திருத்தலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர். இத்திருக்கோவில் ராமபிரான் ராமேஸ்வரம் செல்வதற்கு முன்பு 41 நாட்களுக்கு முன்பு உருவான திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் தான் அக்கினிக் குண்டம் வளர்த்து உயிர் நீத்த வானரங்கள், கழுகுகள், வீரர்கள் ஆகியோருக்கு முதலில் தர்ப்பணம் செய்த புனித இடம் என வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற  இத்திருத்தலத்தில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் அவர்கள் ராமர் திருத்தலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தர்ப்பணம் கொடுத்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் விநாயகர் கோவில் வளாகத்தில், நேற்று தை அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி முதல் பக்தர்கள் தெப்பக்குளம் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் கூடினார்கள். அவர்களுக்கு அர்ச்சகர்கள் முன்னோர்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அவர்கள் ஆசி பெற வழிபாடுகள் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நிகழ்ச்சியையொட்டி ஏழைகளுக்கு துணிமணிகள் பிரசாதங்களை பொதுமக்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவகலைபிரியா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்கள்.

Next Story