கடனுக்கு பீா் கொடுக்காததால் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை தாக்கிய வாலிபர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ


கடனுக்கு பீா் கொடுக்காததால்  டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை தாக்கிய வாலிபர்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 11 Feb 2021 10:11 PM IST (Updated: 11 Feb 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

கடனுக்கு பீா் கொடுக்காததால் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை தாக்கிய வாலிபர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சிதம்பரம்.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவர் சிதம்பரம் அருகே கண்ணங்குடி மெயின் ரோட்டில் அபூர்வநாதன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த வாலிபர்கள் 3 பேர், சங்கரிடம் கடனுக்கு பீர் பாட்டில் தருமாறு கேட்டுள்ளனர். 
அதற்கு அவர் கடனுக்கு தர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சங்கரை ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கினர். மேலும் கடையில் இருந்த பீர் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். 

தாக்குதல்

இதற்கிடையே சங்கரை வாலிபர்கள் 3 பேர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்த புவனகிரி, சிதம்பரம் பகுதியை சேர்ந்த விற்பனையாளர்கள், சங்கரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்தனர். மேலும் கார்த்தி, யுவராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பேட்டி

இதற்கிடையே அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் பணம் இல்லாமல் மதுபானங்களை பெறவேண்டும் என்ற நோக்கில் சமூக விரோத கும்பல் விற்பனையாளர்களை தாக்கி, மிரட்டும் சம்பவம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது. இதுபோல் தாக்குதல் நடக்கும் போது காவல்துறையினரிடம் புகார் அளித்தால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் தான் விற்பனையாளர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 
தற்போது விற்பனையாளரை தாக்கிய கார்த்தி, யுவராஜ் ஆகியோர் சிதம்பரம் பகுதியில் வெவ்வேறு கடைகளில் இதுபோன்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மாநில தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story