தை அமாவாசையையொட்டி நடராஜர் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்


தை அமாவாசையையொட்டி  நடராஜர் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Feb 2021 10:11 PM IST (Updated: 11 Feb 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி நடராஜர் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

அண்ணாமலைநகர், 

மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் தை, ஆடி, மகாளய அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்ததாகும். இதில் ஆடி, தை மாதத்தில் வரும் அமாவாசைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.
அதாவது, ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி வைக்கிறோம் என்று அனைவராலும் கூறப்படுகிறது. இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள் காகத்தின் வடிவாக நமது வீட்டுக்கு வருவது வழக்கம். எனவே காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

தர்ப்பணம்

இத்தகையை சிறப்பு வாய்ந்த தை அமாவாசையான நேற்று உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை 5 மணி முதல் தர்ப்பணம் கொடுக்க கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் சிவகங்கை குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தீர்த்தவாரி

இதேபோல் தை  அமாவாசையை முன்னிட்டு நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகர சாமி நேற்று முன்தினம் இரவு சிவகங்கை குளத்தில் எழுந்தருளினார். அங்கு அஸ்திர ராஜருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதனையடுத்து குஹ்ய தீர்த்தம் என போற்றப்படும் கிள்ளை கடற்கரைக்கு சந்திரசேகர சாமி புறப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை தீர்த்தவாரி நடந்தது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அம்மாபேட்டை புலிமடு தீர்த்த குளத்திலும், இளமையாக்கினார் கோவில் குளத்திலும், அனந்தீஸ்வரர் கோவில் குளமான அனந்த தீர்த்த குளம், நாகச்சேரி தீர்த்த குளம், பிரம்ம தீர்த்தம் என போற்றப்படும் சிங்காரத்தோப்பு குளம், தில்லைக் காளியம்மன் கோவில் எதிரே உள்ள சிவப்பிரியை குளம், சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள அமுத தீர்த்தம் என கூறப்படும் திருப்பாற்கடல் குளம் ஆகியவற்றிலும் சந்திரசேகர சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. முடிவில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்ளே சாமிக்கு தினந்தோறும் அபிஷேகம் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும், பரமானந்த கூபம் அருகே சுவாமி எழுந்தருளியதும் தீர்த்தவாரி நடந்தது. இந்த தச தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story