அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 9 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் அவர்கள் 6 நாட்கள் சாலை மறியல் போராட்டங்களிலும், 3 நாட்கள் நூதன போராட்டங்களிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 10-வது நாளான நேற்று சங்க தலைமையின் முடிவின்படி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வருகிற 19-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். அதுவரை அரசு ஊழியர் சங்கத்தினர் துறைவாரியாக அந்த போராட்டம் குறித்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story