ரேஷன்கடைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் நள்ளிரவில் குட்டிகளுடன் 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ரேஷன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
வால்பாறை
குட்டிகளுடன் கூடிய 6 காட்டு யானைகள் கூட்டம் வால்பாறையில் உள்ள நீரார் எஸ்டேட் ரயான் டிவிசன் பஸ் நிறுத்தம் பகுதியில் காணப்பட்டது.
பின்னர் இந்த யானைகள் அங்கு அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவு மற்றும் பக்கவாட்டு சுவற்றை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு் கடைக்குள்ளிருந்த அரிசி மூட்டைகளை வெளியே எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
இதை பார்த்த எஸ்டேட் தொழிலாளர்கள் யானைகளை கூச்சலிட்டு விரட்டத் தொடங்கினர்.
மேலும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபந்தங்களை மூட்டியும் யானைகளை விரட்ட தொடங்கினர்.
ஆனால் அந்த யானைகள் ரேஷன் அரிசியை அவசரமாக சாப்பிட்டு சேதப்படுத்திக்கொண்டிருந்தன. வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இந்த ரேஷன் கடையில் மாதாந்திர அளவுக்கு கூடுதலாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வட்டவழங்கல் அலுவலர் மூர்த்தியிடம் கேட்ட போது,
இந்த ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் கிராம மக்கள் உள்ளனர்.
இவர்கள் ரேஷன் அரிசிகளை வாங்கிக்கொண்டு அவர்களது கிராமங்களுக்கு ஒட்டுமொத்த அரிசிகளையும் சுமந்து கொண்டு வனப்பகுதிக்குள் நடந்து செல்லமுடியாது.
எனவே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வந்து எடுத்து செல்வார்கள். எனவே இவர்கள் வாங்கி வைத்து விட்டு சென்ற அரிசி மூட்டைகள் தான் ரேஷன் கடைக்குள் கூடுதலாக இருந்ததாக தெரியவருகிறது.
Related Tags :
Next Story