காவிரி ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையையொட்டி காவிரி ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கரூர்
தை அமாவாசை
தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றிற்கு காலை முதலே ஏராளமானோர் வந்து, புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
குளித்தலை
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு குளித்தலை மற்றும் இதை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்னர், ஆற்றங்கரையில் ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் சென்று இறந்த தங்களது தாய், தந்தை, முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும், முன்னோர்கள். தங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யவேண்டுமென வேண்டியும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில்விட்டு வழிபட்டனர். இதையடுத்து கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுபாளையம் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே, குளிர்ந்த நீரையும், பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடினார்கள். பின்னர் இறந்த தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவற்றை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
நொய்யல்
நொய்யல் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலை முதலே திரண்டவர்கள் எள் மற்றும் அரிசி மாவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு இஷ்ட தெய்வங்களை வேண்டி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆற்றில் நீராடி சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story