விவசாயிகளை சுட்டு வீழ்த்திய கட்சி தி.மு.க.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
விவசாயிகளை சுட்டு வீழ்த்திய கட்சி தி.மு.க.முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
திருப்பூர்:-
மின்கட்டணத்தை குறைப்பதற்காக போராடிய விவசாயிகளை சுட்டு வீழ்த்திய கட்சி தி.மு.க. என்று அவினாசியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் வருகை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் தேர்தல் பிரசாரத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக நேற்று திருப்பூருக்கு வந்தார். முன்னதாக காலையில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவினாசிக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அவினாசியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. அவர்களது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. வாரிசு அரசியல் நடைபெறுகிற ஒரு கட்சி என்றால் அது தி.மு.க. தான். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அதன் பிறகு அவரது மகன் ஸ்டாலின். தற்போது அடுத்த தலைமுறையும் முளைத்து விட்டது.
தி.மு.க. மக்களுக்காக கட்சி நடத்தவில்லை. வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருகிறது. அ.தி.மு.க. மக்களுக்காக வாழ்ந்து வரும் கட்சி. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி பொற்கால ஆட்சி. அவர்களது ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தான் ஏராளம். இன்று கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை ஏற்றம் பெற்று விட்டது என்றால், இவர்கள் போட்ட திட்டம் தான்.
தமிழகம் ஏற்றம் மிகுந்த பாதையில் சென்று வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கோரிக்கை வைத்தனர். அவினாசி, கோவை, ஈரோடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வறட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். தற்போது நிலத்தடி நீர் மட்டம் 1000 அடியையும் தாண்டி கீழே குறைந்துவிட்டது. எனவே, இந்த நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்றும் தொடர் போராட்டமே அவினாசி பகுதிகளில் நடத்தப்பட்டது. இதனால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த கனவு திட்டத்தை நனவாக்குவேன் என விவசாயிகளிடம் தெரிவித்தார். அதுபோல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜெயலலிதா மறைந்தாலும், அவரது வாக்கு மறையாது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் 3 மாவட்ட விவசாயிகளின் கனவை நனவாக்கியுள்ளது. ரூ.1,652 கோடியில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீண்டும் பொதுமக்களின் ஆசியுடன் முதல்-அமைச்சராகி நானே இந்த திட்டத்தை தொடங்கிவைப்பேன். இந்த திட்டம் முடியும் போது அவினாசியில் உள்ள ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு நீர் கிடைக்கும். முழுக்க, முழுக்க மாநில அரசின் நிதி ஆதாரத்தை வைத்து இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறோம். இதுபோன்ற ஏராளமான திட்டங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோல் ஏரி, குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, விவசாயிகளின் பங்களிப்போடு நிறைவேற்றி வருகிறோம். தற்போது பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த ஏரிகள் தற்போது புதுப்பொழிவு பெற்றுள்ளன. அங்குள்ள வண்டல் மண் விவசாயத்திற்கு அடி உரமாக பயன்படுகிறது. இவ்வாறு அற்புதமான திட்டங்களை கொண்டுவந்துள்ளது அ.தி.மு.க. அரசு. நானும் விவசாயி என்பதால், விவசாயிகள் படும் இன்னல்கள் எனக்கு நன்றாக தெரியும்.
விவசாய கடன் ரத்து
விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது அறிவிப்போடு நின்று விடும் என்றார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த அறிவிப்பை கொடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் வரலாறு படைத்த அரசு. இந்த பயிர் கடன் ரத்திற்கு உடனே அரசாணை வெளியிடப்பட்டு, இன்னும் 10 நாட்களுக்குள் அவரவர் வாங்கிய பயிர் கடன் ரத்துக்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற உற்சாக செய்தியை தெரிவிக்கிறேன்.
இதே தி.மு.க. ஆட்சியை நினைத்து பாருங்கள். தி.மு.க. ஆட்சி, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விவசாயிகள் பம்புசெட்டுக்கு பயன்படுத்தும் மின்சார கட்டணத்தில் ஒரு யூனிட்டிற்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை ஒடுக்க அன்று தி.மு.க. துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு நினைவு தூண்களே சாட்சி. இதனை மறுக்க முடியுமா?. விவசாயிகளை சுட்டு வீழ்த்திய கட்சி தி.மு.க. ஆனால் அ.தி.மு.க. விவசாயிகளை தூக்கி விடுகிற கட்சி. விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
மு.க.ஸ்டாலினுக்கு வேலை இல்லை
ஆனால் வேண்டும் என்றே மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார். நான் ஒரு விவசாயி என்றால் அவருக்கு கோபம் வருகிறது. விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். வேறு என்ன சொல்ல முடியும். ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றால் தொழிலாளி என்பார்கள், அலுவலகத்திற்கு சென்றால் ஆபிசர் என்பார்கள். இது இயற்கையானது. ஆனால் ஏன் அவருக்கு கோபம் வருகிறது. மு.க.ஸ்டாலினுக்கு வேலை எதுவும் இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில் இருக்கிறது. நாம் உழைத்து கொண்டு தான் உயர்ந்து வருகிறோம். நானும் விவசாயம் செய்து வருகிறேன். இதனை சொன்னால் ஏன் கோபம் வருகிறது. விவசாயிகளின் இன்னல்கள் தெரிந்திருப்பதால் தான் அவ்வப்போது அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் திட்டங்களை கொண்டு வருகிறேன். டிராக்டர் வாங்க மானியம். ஸ்பேரயர் வாங்க மானியம். வறட்சி வந்தால், விவசாயிகளை காப்பாற்ற ரூ.2,244 கோடி இடுபொருட்கள் வாங்க மானியம். தமிழகத்திலேயே வறட்சிக்காக நிவாரணம் வழங்கியே ஒரே ஆட்சி அ.தி.மு.க. தான்.
விளம்பர பிரியர்
இந்த தொகுதியில் 4 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரத்திற்காக அறிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலின் தான் விளம்பர பிரியர். சாதாரண விவசாயி. மண்வெட்டியை பிடித்து இந்த நிலைக்கு உயர்ந்து வந்துள்ளேன். கஷ்டம் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் உங்களுக்கு கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் இந்த பதவியில் இருக்கிறீர்கள். ஏழை மக்களின் கஷ்டம் புரியவாய்ப்பில்லை. மக்களோடு மக்களாக நாங்கள் வாழ்ந்ததால் தான் ஏராளமான சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
விவசாயிகள், ஏழை தொழிலாளிகளுக்கு என கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற காலத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம். கிராமப்புறங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தற்போது 2½ லட்சம் வீடு கிராமப்புறங்களில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கினோம். இந்த நிதி போதவில்லை என மக்கள் தெரிவித்ததால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.70 ஆயிரம் உயர்த்தி வழங்கினோம். இதற்காக ரூ.1,804 கோடி அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கூட்டு குடிநீர் திட்டம்
இதுபோல் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவித்தொகையும் மத்திய அரசிடம் பெற்றுக்கொடுத்துள்ளோம். கல்வி தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அவினாசி பகுதியில் கொண்டு வந்து ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி படிக்க திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதிக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை எங்களது அரசு தான் கொண்டுவந்துள்ளது. அதனால் பள்ளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.
ரூ.58.15 கோடி மதிப்பில் அவினாசி-அன்னூர் மற்றும் ஹோம்பெரியபாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுகுடிநீர் திட்டம். இந்த திட்டத்தையும் நிறைவேற்றுவோம். பாதுகாக்கப்பட்ட நீரை வழங்க வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். ரூ.96 கோடி மதிப்பில் அவினாசி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர், சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏராளமானவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
கல்விக்கு முக்கியத்துவம்
இதுபோல் குடிநீர் பிரச்சினைகள் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என தெரிவிக்கிறேன். மேலும், அவினாசியில் மேம்பாலம், தடுப்பணைகள், விவசாயிகளுக்காக பாடுபட்ட மறைந்த நாராயணசாமி நாயுடுக்கு மணிமண்டபம் வழங்கி அரசு விழாவாக நாங்கள் எடுத்து வருகிறோம்.
மாணவர்களின் எதிர்காலம் தான் அரசின் எதிர்காலம். மாணவர் சமுதாயம் வளம் பெற வேண்டும். ஒரு நாடு செழிக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கான அரசு அ.தி.மு.க. அரசு. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
----------
Related Tags :
Next Story