ஸ்ரீவில்லிபுத்தூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவேங்கடபுரம் காலனி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அச்சம்தவிர்த்தான் ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என புகார் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேதநாயகம் தலைமை தாங்கினார்.
பேச்சுவார்த்தை
இதில் நிர்வாகிகள் கணேசன், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், விவசாய சங்கத்தைச் சேர்ந்த பலவேசம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் யூனியன் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் யூனியன் தலைவர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story