விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அச்சக ஊழியர் திடீர் ரகளை


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அச்சக ஊழியர் திடீர் ரகளை
x
தினத்தந்தி 12 Feb 2021 12:30 AM IST (Updated: 12 Feb 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அச்சக தொழிலாளி ஒருவர் திடீரென பரிசோதனைக் கூடத்தில் நுழைந்து கணினி, பரிசோதனை கருவிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

சாத்தூர் படந்தால் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 38). அச்சக தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

இதற்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து கடந்த 8-ந்தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

வெளியேறினார்

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பாண்டி ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென வெளியேறினார். அருகில் உள்ள இளங்கோவன் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த அவரை அங்கு ரோந்து சென்ற கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரித்தார்.
இதில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததும், பாதியில் அங்கிருந்து வெளியேறியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். 
அடித்து நொறுக்கினார்

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் பாண்டி திடீரென ஆவேசம் அடைந்து அருகில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகத்திற்கு சென்றார். அங்கிருந்த ஊழியர் தடுத்தபோது அவரை தாக்கி வெளியே தள்ளிவிட்டு உள் பக்கமாக கதவை பூட்டிய பாண்டி பரிசோதனை கூடத்தில் இருந்த கணினி, எலிசா பரிசோதனைக் கருவி, ரத்த பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை அங்கிருந்த கம்பியால் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து பரிசோதனைக்கூட கதவை உடைத்து உள்ளே சென்று பாண்டியை வெளியே இழுத்து வந்தனர். 

இதனையடுத்து பாண்டி மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேதப்படுத்தப்பட்ட பரிசோதனைக்கூட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் தான் சிகிச்சையில் இருந்த பாண்டி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே அரசு ஆஸ்பத்திரியில் அதிக எண்ணிக்கையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story